youthpluz
 Home  |  மற்றவை

விநாயகரின் அருமை !!

விநாயகரின் அருமை !!

தமிழ்நாட்டின் நெல்லைச் சீமையில் நவதிருப்பதிகள் எனப் போற்றப்படும் வைணவ திருத்தலங்களில் முதல் திருப்பதியாகத் திகழ்வது ஸ்ரீவைகுண்டம். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் இந்தத் திருத்தலம், தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்கு கோயில்கொண்டிருக்கும் வைகுண்ட நாதனின் திருவருளாலும்... அவரின் திருக்கோயிலுக்கு இடப்புறத்தில் நூறு மீட்டர் தூரத்தில் ஒரே கோயிலில் குடியிருக்கும் பதினாறு கணபதியரின் அருட்கடாட்சத்தாலும் சிறப்புற்றுத் திகழ்கிறது, இந்த ஊர்.   பதினாறு கணபதியர் ஆலயத்தை ‘ஷோடச விநாயகர் ஆலயம்’ என்று அழைக்கிறார்கள் ஊர்மக்கள்.

17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானச் செல்வராம் குமரகுருபரர் பிறந்தது இவ்வூரில் தான். அவர், தமது ஐந்து வயது வரையிலும் வாய் பேசாமல் இருக்கவே, அவருடைய பெற்றோரான சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமசுந்தரி அம்பாளும் மிகவும் வருந்தினர். தங்கள் பிள்ளையை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று, அங்கே முருகப்பெருமானின் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருந்து, மகனுக்குப் பேசும் சக்தியை அருளும்படி முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டனர்.

அவர்களின் வேண்டுதல் விரைவில் பலித்தது. செந்தூர் முருகனின் திருவருளால் பேசத் துவங்கிய குமரகுருபரர், முருகப்பெருமான் குறித்த பாடல்களை மடை திறந்த வெள்ளம் போல பாடினாராம். இதுவே பின்னாளில் ‘கந்தர் கலிவெண்பா’வாக தொகுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’, `சகலகலாவல்லி மாலை’ முதலான பல ஞானநூல்களை அருளிய குமரகுருபரர், வடக்கே காசியம்பதிக்கும் சென்றார். அங்கே மடம் ஒன்றை நிறுவினார். பிறகு, கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாளில் கிளை மடம் ஒன்றையும் நிறுவினார். காசி மடத்தில் அவர், பதினாறு அம்சமுள்ள ‘ஷோடச விநாயகர்’ சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாராம்.

காசியில் இருப்பதைப் போலவே, குமரகுருபரரின் பிறந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்திலும் ஷோடச விநாயகர்கள் அருள வேண்டும் என்று எண்ணம் கொண்ட, ‘திருப்பனந்தாள்’ காசி மடத்தின் அன்றைய ஆதீனம் அருள்நந்தி தம்பிரான் ஸ்வாமிகள், இந்த ஊரிலும் ஷோடச விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார்.

சுமார் 100 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில், கடந்த பிப்ரவரி மாதம் தான் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஷோடச என்றால் பதினாறு என்று பொருள். அதற்கேற்ப, இங்கே பதினாறு பேறுகளையும் அருளும் நாயகர்களாகத் திகழ்கிறார்கள் ஷோடச கணபதியர்.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பதினாறு விநாயக விக்கிரகங்களும் வட்ட வடிவமாக சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மூர்த்திகளின் திருநாமங்கள்: பால கணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, திக்விஜய கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்னராஜ கணபதி, ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லக்ஷ்மி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி மற்றும் ஊர்த்துவ கணபதி.

விநாயகருக்கு உகந்த திருநாட்களில் இந்தக் கோயிலுக்கு வந்து  ஒவ்வொரு விநாயகரின் திருப்பெயரையும் உச்சரித்து, போற்றி கூறி வழிபட்டால், துன்பங்கள் விலகும்; இன்பங்கள் யாவும் கைகூடும்.

இந்தக் கோயிலில் விநாயக சதுர்த்திதான் முக்கிய விழாவாகும். அன்று, பதினாறு விநாயகர் களுக்கும் பதினாறு வகை அபிஷேகங்களும், பதினாறு வகை நைவேத்தியங்களும் படைக்கப் படும். ஒவ்வொரு கணபதியும் ஒவ்வொரு வகை பலனைக் கொடுத்தாலும், கல்வியில் சிறக்கவும், காரியத்தடை நீங்கவும், விரைவில் வேலை கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும் இந்த ஷோடச விநாயகர்களை வழிபட்டுச் செல்கிறார்கள், பக்தர்கள்.

அமாவாசை நாள் முதல் பெளர்ணமி நாள் வரை 16 நாட்கள் தொடர்ந்து இக்கோயிலுக்கு வந்து, தினம் ஒரு விநாயகருக்கு (வரிசைப்படி) அருகம்புல் மாலை சாற்றி, தினம் ஒரு நெய் தீபம் ஏற்றி, விநாயகருக்கான ‘ஷோடச ஸ்லோகம்’ சொல்லி பதினாறு முறை சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறுமாம். இந்த 16 நாட்களும் 16 வள்ளல்களாக காட்சியளிப்பார்களாம், இந்த ஷோடச விநாயகர்கள். நினைத்த காரியம் நிறைவேறியதும் புதன், சனி அல்லது பெளர்ணமி நாட்களில் இங்கு வந்து பதினாறு விநாயகர்களுக்கும் பதினாறு வகை அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம், அருகம்புல் மாலை சாற்றி, பசு நெய் ஊற்றி 16 தீபங்கள் ஏற்றி, 16 மோதகங்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

நெல்லைச் சீமைக்குச் செல்லும் அன்பர்கள், மறவாமல் ஸ்ரீவைகுண்டத்துக்கும் சென்று இந்த ஷோடச கணபதியரை வழிபட்டு வாருங்கள்; பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அருள்புரிவார்கள், இந்த பதினாறு வள்ளல்களும்!

  02 Sep 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மொபைல் நம்பர் கொடுக்காமல் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்தலாம் அதுக்கான வழிமுறைகள் !!
20,30 வயதில் இருக்கும் மக்களே இன்னறைய இதய நோயை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இப்போது அது உங்களுக்கும் வரலாம் !!
டோனிக்கு பிடித்த தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர் சந்தோஷ்த்தில் இவர் ரசிகர்கள் !!
ஓகே கூகுள் விஷயங்கள் !!
அலுவலுக்கதையும் வீட்டையும் சரிசமமாக கவனிப்பது எப்படி !!
விநாயகரின் அருமை !!
எந்த பாத்திரத்தில் சமைத்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று பாருங்கள் !!
இரவில் கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !!
ரவை போண்டா நல்லது மாலை செய்து சாப்பிட்டுப் பாருங்கள் !!
பென் டிரைவில் உள்ள விஷயங்கள் அழிந்து விட்டால் செய்ய வேண்டியவை !!