youthpluz
 Home  |  மற்றவை

20,30 வயதில் இருக்கும் மக்களே இன்னறைய இதய நோயை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இப்போது அது உங்களுக்கும் வரலாம் !!

20,30 வயதில் இருக்கும் மக்களே இன்னறைய இதய நோயை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இப்போது அது உங்களுக்கும் வரலாம் !!

உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், ஏந்த ஒரு பொய்யையும் கூட மிக எளிதாக நம்ப வைக்க முடியும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் பல்வேறு தவறான தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. அப்படித்தான் இதயம் பற்றியும் பல தவறான கருத்துக்கள் பரவிக்கொண்டே இருக்கிறது. வயதானவர்களுக்கு, அதிக கொழுப்புள்ள உணவு மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களுக்குத்தான் இதய நோய்கள் வரும் என்று பல்வேறு விஷயங்கள் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், எது உண்மை, எது பொய் என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. இதயநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்… அது மிகவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்பவராக இருந்தாலும் சரி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்படி ஏராளமான தவறான நம்பிக்கைகள் இதய நோய்கள் தொடர்பாக இருக்கின்றன. இவற்றில் எவை எல்லாம் உண்மை என, வாங்க பார்க்கலாம்!

1. இளம் வயதுதான் ஆகிறது. இதயநோய் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை.

உண்மை: இப்போது எப்படி வாழ்கின்றோமோ, அதுதான் எதிர்காலத்தில் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். குழந்தைப் பருவத்தில் இருந்தே அல்லது இளமைப் பருவத்தில் இருந்தே ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்த படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்ல… இளம் மற்றும் நடுத்தர வயதினர் கூட இதய நோய் பாதிப்பு காரணமாக வருகின்றனர். உடல்பருமன், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற காரணிகள் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

2 மாரடைப்பு வந்தால் நெஞ்சில் ஏற்படும் வலியைக் கொண்டே கண்டறிந்துவிடலாம்.

உண்மை: வலி வரும் என்று இல்லை. பொதுவாக மாரடைப்பு வருகிறது என்றால், நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதாவது, சுவாசித்தலில் சிரமம், வாந்தி, தலைபாரம் மற்றும் வலி, ஒரு கை அல்லது இரண்டு கைகளிலும் அசௌகரியம், கழுத்து, தாடை, முதுகு வலி போன்றவை ஏற்படலாம். சர்க்கரை நோய் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படாமல்கூட போகலாம். (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சர்க்கரை நோய் காரணமாக மாரடைப்பு அறிகுறிகள் வெளிப்படவில்லை.) ஆனால், இவர்களுக்குத்தான் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது. எனவே, லேசாக இந்த அறிகுறிகள் தென்பட்டாலே அருகில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு விரைவது அல்லது 108ஐ அழைத்து தெரிவிப்பது நல்லது.

3. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மருந்தை எடுப்பதால், எதை வேண்டுமானலும் சாப்பிடலாம்.

உண்மை: நம் உடலில் கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் உருகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. அதைத் தவிர, நம் உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலில் ஒரு பகுதியை நம் கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. ஸ்டாடின்ஸ் (Statins) எனப்படும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலை மட்டுமே கட்டுப்படுத்தும். கொழுப்பைக் குறைக்கும் மருந்தை எடுத்துக்கொண்டு உணவின் மூலமாகவும் கொலஸ்ட்ராலைச் சேர்த்துக்கொண்டே போவதால் எந்த பயனும் இல்லை. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி கொலஸ்ட்ரால் குறைவான உணவுப்பொருட்களை உண்பதே நல்லது.

4. வயதாவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். இதனால் பிரச்னை இல்லை.

உண்மை: நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ரப்பர் டியூப்புடன் ஒப்பிடலாம். நாளாக நாளாக அந்த டியூப் எப்படி தன் உறுதித்தன்மையையையும் நெகிழ்வுத்தன்மையையும் இழக்கிறதோ அதுபோலத்தான் நம் ரத்த நாளங்களும் உள்ளன. வயதாவதால் ரத்த நாளங்கள் தளர்வடைகின்றன. அதனால், ரத்தத்தை வேகமாகப் பாய்ச்சுவதற்காக இதயம் கடினமாக உழைக்கிறது. ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால், நாளங்கள் மேலும் பலவீனமடைகின்றன. இதனால் இதயம் மேலும் மேலும் கடினமாக உழைப்பதால், ஒருகட்டத்தில் இதயத் தசைகளும் தளர்வுறுகின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதால், இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

5. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்தாலேபோதும், இதய நோய் வராது.

உண்மை: சர்க்கரை நோய்க்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது, சிறிய ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நுண் ரத்த நாளப் பிரச்னைகளான (Micorvascular complications) சிறுநீரகப் பாதிப்புகள், பார்வை இழப்பு, நரம்புப் பிரச்னைகள் போன்றவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் மிகவும் அவசியம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்ற இதர காரணங்களாலும், ரத்த நாளங்கள் வீக்கமுறுவதாலும் (Inflamation) மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். எனவே, டயாபடீஸை கட்டுக்குள் வைப்பதுடன், கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.

6. வைட்டமின்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் இதய நோய்கள் வராது.

உண்மை: ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் போன்றவை இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆனால், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் கார்டியோவாஸ்குலர் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உணவின் மூலமாக வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதே சிறந்த வழி. இதற்கான காரணங்களை முழுமையாக அறியமுடியவில்லை என்றாலும், இதயத்தைப் பலப்படுத்தும் வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்த கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துகொள்வது நல்லது. வானவில் நிறங்களில் உள்ள ஏழு வகை காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் இயற்கையான முறையில் அனைத்து வைட்டமின்களும் தாதுஉப்புக்களும் கிடைத்துவிடும்.

7. பல ஆண்டுளாக உள்ள சிகரெட் பழக்கத்தை திடீரென்று நிறுத்துவதால் இதயநோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியாது.

உண்மை: புகைபிடிப்பதை நிறுத்திய விநாடியில் இருந்தே அதன் பலன்கள் உடலுக்குக் கிடைக்கத் தொடங்குகின்றன. எத்தனை வருடங்கள், எத்தனை நாட்கள் புகைபிடித்தீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஒரு வருடம் புகைபிடிக்காமல் இருப்பதால், இதய நோய்களுக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைகிறது என்கிறார்கள். இதுவே, 10 ஆண்டுகளாகப் புகைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு புகைப்பழக்கம் இல்லாதவர்களின் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமோ அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே, இப்போதே இந்தக் கணமே புகைபிடிப்பதை நிறுத்துவது நல்லது.

8. இதய நோய்கள் ஆண்களுக்குத்தான் வரும்; பெண்களுக்கு ஏற்படாது.

உண்மை: 1984 வரை உலகில் பெண்களே இதய நோய்களால் அதிகமாக இறந்துகொண்டிருந்தார்கள் என்றால், நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம். 55 வயதுக்கு மேல், 70 சதவிகித ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய ரத்தநாள பிரச்னைகள், இதய செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 80 வயதில் 83 சதவிகித ஆண்களுக்கும் 87 சதவிகிதப் பெண்களுக்கும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மெனோபாஸ் வரையிலான காலக்கட்டத்தில் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. மெனோபாஸஸுக்குப் பிறகு, அந்த பாதுகாப்பு அவர்களைவிட்டு போய்விடுகிறது. எனவே, நீங்கள் ஆணோ பெண்ணோ, 50 வயதைக் கடந்தவர் என்றால், குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தப் பரிசோதனையும், இதயப் பரிசோதனையும், கொலஸ்ட்ரால் பரிசோதனையும் செய்துவருவது நல்லது.

9. இதய நோய் இருந்தால் கொழுப்பையே சாப்பிடக் கூடாது.

உண்மை: இதய நோய் இருப்பவர்கள் நிறைவுற்ற கொழுப்பையும், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பையும், டிரான்ஸ் ஃபேட்டையும் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களும் எண்ணெய்களும் போதுமான அளவு சாப்பிடலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த எண்ணெய் மீன்கள், ஃபிளாக்ஸ் விதை போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள், மீன்கள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

10. சிறிய மாரடைப்பு என்பது பெரிய ஆபத்து அல்ல.

உண்மை: அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதே முக்கியம். முதல் அட்டாக் வரும்போது சிலருக்கு மாரடைப்பு வந்ததைக்கூட உணர முடியாது. ஆனால், ஒருமுறை அட்டாக் ஏற்படுவது என்பது, உங்களுக்கான எச்சரிக்கை மணி! அடுத்த அட்டாக் உயிரைப் பறிக்கும் எமனாக மாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சரியான எடையைப் பராமரிப்பது, அளவான கொழுப்பைப் பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது என இதய நோய்களைத் தவிர்ப்பதற்கான ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். மைல்டு அட்டாக்தானே என்று அசட்டையாக இருப்பது, மரணத்தை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் செயல். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

  29 Sep 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மொபைல் நம்பர் கொடுக்காமல் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்தலாம் அதுக்கான வழிமுறைகள் !!
20,30 வயதில் இருக்கும் மக்களே இன்னறைய இதய நோயை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இப்போது அது உங்களுக்கும் வரலாம் !!
டோனிக்கு பிடித்த தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர் சந்தோஷ்த்தில் இவர் ரசிகர்கள் !!
ஓகே கூகுள் விஷயங்கள் !!
அலுவலுக்கதையும் வீட்டையும் சரிசமமாக கவனிப்பது எப்படி !!
விநாயகரின் அருமை !!
எந்த பாத்திரத்தில் சமைத்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று பாருங்கள் !!
இரவில் கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !!
ரவை போண்டா நல்லது மாலை செய்து சாப்பிட்டுப் பாருங்கள் !!
பென் டிரைவில் உள்ள விஷயங்கள் அழிந்து விட்டால் செய்ய வேண்டியவை !!